சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 26 Jun 2022 9:30 PM IST (Updated: 26 Jun 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல்

சிறப்பு வழிபாடு

பிரதோஷ காலங்களில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி பிரதோஷ நாளான திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காலையில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் நந்தி, கொடிமரம் மற்றும் காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு சுவாமி அம்பாள் கோவிலின் உட்பிரகாரத்தில் 3 முறை வலம் வருதல் நடைபெற்றது.

திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், மேற்கு ரதவீதி சிவன் கோவில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

பழனி, நத்தம்

இதேபோல் பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பழனி பெரியாவுடையார் கோவில், மலைக்கோவில் கைலாசநாதர் சன்னதி, பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி என பழனி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிவபெருமான், நந்திக்கு பால், பழம், பன்னீர் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. மேலும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆனி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது. இதையொட்டி மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், தீர்த்தம், வில்வ இலை, உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி சிலைக்கு தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.


Next Story