கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பகோணம்:
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காசிவிஸ்வநாதர் கோவில்
கும்பகோணம் விசாலாட்சி அம்பிகா சமேத காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயூ ஆகிய நவகன்னிகை அம்மன்களுக்கு சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.
அதன்படி நேற்று கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயூ ஆகிய நவகன்னிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
குறிப்பாக காவிரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பெண்கள், பக்தர்கள் கலந்துகொண்டு நவகன்னிகைகளை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் மங்களாம்பிகை கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.
சிறப்பு வழிபாடு
இதேபோல் கும்பகோணம் மேலக்காவேரி தோப்பு தெரு காசிவிஸ்வநாதர் கோவிலில் காவிரி அம்மனுக்கு ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வளையல் மாலை அணிவித்து திரளான பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து வழிபட்டனர்.
கும்பகோணம் பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.