கோவில்களில் சிறப்பு வழிபாடு
மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சாத்தூர் பெருமாள் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், ஓடைப்பட்டி விநாயகர் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதேபோல் செண்பகத்தோப்பு மலையில் இருக்கும் காட்டழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அங்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் போன்ற கோவில்களிலும் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது.
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு திருச்சுழி திருமேனிநாதர் கோவில், சல்வாஸ்புரம் வரதராஜ பெருமாள் கோவில், பி.தொட்டியாங்குளம் விநாயகர் கோவில், ம.ரெட்டியபட்டி வரதராஜ பெருமாள் கோவில், குலசேகரநல்லூர் விநாயகர் கோவில், பாறைக்குளம் சிவன் கோவில், திருச்சுழி மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆலங்குளம்
ஆலங்குளம் காளியம்மன் கோவில், ராசாப்பட்டி காளியம்மன் கோவில், ஏ.லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், கீழாண்மறைநாடு காளியம்மன் கோவில், வலையபட்டி காளியம்மன் கோவில், மேலாண்மறைநாடு செல்லியாரம்மன் கோவில், காளவாசல் காளியம்மன் கோவில், கீழராஜகுலராமன் காளியம்மன் கோவில், வி.புதூர் காளியம்மன் கோவில், சமுசிகாபுரம் கருமாரியம்மன் கோவில், நரிக்குளம் காளியம்மன் கோவில், மாதாங்கோவில்பட்டி காளியம்மன் கோவில், உப்புபட்டி காளியம்மன் கோவில், நதிக்குடி காளியம்மன் கோவில், முத்துச்சாமிபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாயில்பட்டி
அதேபோல தாயில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
துலுக்கன்குறிச்சி காளியம்மன் கோவில், வெற்றிலையூரணி காளியம்மன் கோவில், விஜயகரிசல்குளம் துர்க்கை அம்மன் கோவில், கீழச்செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், சுந்தாளம்மன் கோவில், மார்க்கநாதபுரத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
சிவகாசி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.