பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு


பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

வத்திராயிருப்பில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சுவாமிக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

முன்னதாக சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி திருவிழா

அதேபோல சேத்தூர் எக்கலாதேவி அம்மன் கோவில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் ஆனது.

தேவதானம் நச்சாடை தவிர்த்த அருளிய சுவாமி கோவில் பரம்பரை அறங்காவலர் துறை ரத்தினகுமார் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 13-ந் தேதி பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மன் தண்டியல் சப்பரத்தில் வீதி உலா வந்து பூ வளர்த்தல், அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் செல்லம் சிங்கம் புலி, செயலாளர் சுந்தரதாஸ் மற்றும் விழாக்குழு கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

சாமி தரிசனம்

அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் உய்யவந்தம்மன், காமாட்சி அம்மன், முத்து மாரியம்மன், சந்தன மாரியம்மன், கருப்பணசாமி மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story