ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
காவிரி ஆறு பாய்ந்து ஓடி வருவதால், நீர் நிலைகள் நிறைந்து கழனியெங்கும் செழிக்கிறது. இதனால் மக்கள் வாழ்வு சிறக்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க காவிரியை அன்னையாக பாவித்து, அதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கன்று பெண்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்துவது வழக்கம். அதன்படி ஆடிப்பெருக்கு நாளான நேற்று திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விளக்கு ஏற்றி வழிபாடு
இதையொட்டி வீட்டின் மூத்த பெண்கள், தங்களது இல்லத்தரசிகள், சிறுவர்-சிறுமியர் உள்பட அனைவரையும் கோட்டைக்குளத்துக்கு அழைத்து வந்தனர்.
இவ்வாறு அங்கு வந்தவர்கள் வாழை இலையில் ஆப்பிள், ஆரஞ்சு உள்பட பல்வேறு வகையான பழங்கள், காப்பரிசி, மஞ்சள் கயிறு வைத்து எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றி காவிரி தாயை வழிபட்டனர். அதன்பிறகு அந்த எலுமிச்சை விளக்கை குளத்தில் மிதக்க விட்டனர். இந்த வழிபாட்டில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டனர்.
கன்னிமார் பூஜை
ஆடிப்பெருக்கையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர், சந்திரசேகர், ஆனந்தவல்லி அம்மன் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி பெரியாவுடையார் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் பெரியாவுடையார் கோவிலில் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் 16 வகை அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதையடுத்து சண்முகநதி ஆற்றங்கரையில், மண்ணால் 7 கன்னிமார் உருவம் பிடித்து வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உலகநலன் வேண்டி மாவிளக்கு வைத்தும், தேங்காய்களை சுட்டு வைத்தும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் சந்திரசேகர், ஆனந்தவல்லி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்ப செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.
ஓலைச்சுவடிகளுக்கு பூஜை
இதேபோல் பழனி அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் ஆடிப்பெருக்கையொட்டி போகர்-புலிப்பாணி சித்தர்களின் ஓலைச்சுவடிகளுக்கு சிறப்பு பூஜை, மலர் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து ஆசிரம வளாகத்தில் உள்ள தொட்டிச்சி அம்மன், சிவலிங்கம், போகர் சித்தர் திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பூஜை நிகழ்ச்சிகளை புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் நிர்வாகிகள் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி
சாணார்பட்டி அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, இளநீர், தயிர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது.
மேலும் மூலவர் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நவாமரத்துப்பட்டி தொட்டிச்சியம்மன்
இடையக்கோட்டை அருகே வலையப்பட்டியில் உள்ள பெரிய அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதேபோல் வாணவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு வந்து நடப்புசாமி மற்றும் தொட்டிச்சியம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு அரிச்சந்திரா என்ற நாடகம் நடந்தது.