காவிரி தாய்க்கு ெபண்கள் படையலிட்டு சிறப்பு வழிபாடு
கும்பகோணம், பேராவூரணியில் ஆடிப்பெருக்கு விழா களைக்கட்டியது காவிரி தாய்க்கு பெண்கள் படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு அணிவித்து உற்சாகமாக கொண்டாடினர்.
கும்பகோணம்:
கும்பகோணம், பேராவூரணியில் ஆடிப்பெருக்கு விழா களைக்கட்டியது காவிரி தாய்க்கு பெண்கள் படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு அணிவித்து உற்சாகமாக கொண்டாடினர்.
ஆடி மாதம்
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும்.
மேலும் தமிழகத்தில் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, காவிரி ஆறு பாயும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடிப்பெருக்கு விழா
இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நேற்று ஆடிப்பெருக்கு விழா களைக்கட்டியது.ஆடிப்பெருக்கையொட்டி நீர்நிலைகளில் பெண்கள் ஒன்றுகூடி கரையில் வாழை இலையில் அரிசி, பழங்கள், பனைஓலை கருகமணி, மஞ்சள், மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படையலிட்டனர். பின்னர், மஞ்சள் கயிறை பெண்கள் ஒருவருக்கொருவர் உற்சாகமாக அணிவித்து கொண்டனர்.
புதுமணத் தம்பதிகள் தங்களது திருமணத்தின்போது அணிந்த மாலைகளை ஆற்றில் விட்டு, புதுத் தாலிக்கயிறு அணிந்து கொண்டனர்.
சிறப்பு வழிபாடு
கும்பகோணம் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, தாராசுரம் அரசலாறு படித்துறை உள்ளிட்ட காவிரி, மற்றும் அரசலாறு ஆற்றின் படித்துறைகளில் அதிகாலை முதல் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கூடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பேராவூரணி
பேராவூரணி ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் குளத்தின் நான்கு படித்துறைகளிலும் வாழை இலையில் தேங்காய், பழங்கள், மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து பெண்கள், புதுமணத்தம்பதிகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பின்னர் மஞ்சள் கயிற்றை சுமங்கலிப் பெண்கள் ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிந்து கொண்டனர், மேலும் புதுமணத்தம்பதிகள் கோவில் குளத்தில் புனித நீராடினர்.
தண்ணீர் நிரப்பும் பணி
பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான குளங்களில் நீர் வற்றி காணப்பட்ட போதிலும் ஆடிப்பெருக்கு விழாவிற்காக கோவில் குளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன்.பரம்பரை அறங்காவலர்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.