பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்
x

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளதாக வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளதாக வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேச்சு போட்டிகள்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி 17-ந் தேதி (சனிக்கிழமை) அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக பேச்சு போட்டிகள் வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் நடைபெற உள்ளது.

6 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 'தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், மாணவர்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 'பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், பேரறிஞர் அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், அண்ணாவின் தமிழ்வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி மக்களிடம் செல்' ஆகிய தலைப்புகளில் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் நடக்கின்றன.

மாணவர்களுக்கு சிறப்பு பரிசு

இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கு 'தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ் சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலக சிந்தனையாளர்களும் பெரியாரும்' என்ற தலைப்புகளில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story