கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலக சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?


கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலக சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 21 Feb 2023 12:30 AM IST (Updated: 21 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுக்க கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலக சாலையில் ேவகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுக்க கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலக சாலையில் ேவகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நகராட்சி அலுவலகம்

திருவாரூர்- மன்னார்குடி வழித்தடத்தில் லெட்சுமாங்குடி சாலை புதிய பஸ்நிலையம் அருகே கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ளதால், நகராட்சி அலுவலகத்திற்கு சென்று வருபவர்கள் சாலையை கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.

அலுவலகத்தில் இருந்து வாகனங்கள் உள்ளே செல்லும் போதும், வெளியே வரும் போதும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த சாலை வழியாக திருவாரூர், மன்னார்குடி, திருச்சி, தஞ்சை கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

விபத்துகள்

இரவு பகலாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் இங்கு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இந்த நிலையில் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையில், 2 பக்கமும் அடுத்தடுத்து ஆபத்தான வளைவுகள் உள்ளன. மேலும், வாகனங்களும் வேகமாக செல்கின்றன. இதனால், நகராட்சி அலுவலகம் உள்ளே செல்லவோ, வெளியே வரவோ எளிதில் முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும், ஆபத்தான வளைவுகள் உள்ளதால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. இதனால், கண் இமைக்கும் நேரத்தில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. அடிக்கடி விபத்து நடப்பதை தடுக்கவும், வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்கவும் நகராட்சி அலுவலக சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நீண்ட நேரம் காத்திருப்பு

இதுகுறித்து கூத்தாநல்லூரை சேர்ந்த ராஜராஜன் கூறியதாவது:- கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி சாலை எதிரே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய நகராட்சி அலுவலகம் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த அலுவலகம் அமைந்துள்ள சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்வதால், சாலையை கடந்து சென்று வர சிரமம் ஏற்படுகிறது. சாலையை கடந்து நகராட்சி அலுவலகத்துக்கு செல்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி நகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

வேகமாக பயணிக்கும் வாகனங்கள்

கூத்தாநல்லூரை சேர்ந்த பாஸ்கரன்:- புதிய நகராட்சி அலுவலகம் அலுவலக கட்டிடம் அமைந்துள்ள சாலையில் வாகனங்கள் வேகமாக பயணிக்கின்றன. இந்த பகுதியில் ஆபத்தான வளைவுகளும் உள்ளன. வேகமாக வரக்கூடிய வாகனங்கள் மோதி விடுமோ என்று மக்கள் அச்சம் அடைகின்றனர். இதனால், அவசர பணிகளுக்காக நகராட்சி அலுவலகம் செல்பவர்கள் அவதிக்கு ஆளாகிறார்கள். இங்கு வேகத்தடை அமைப்பது அவசியமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story