அதிக வேகத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் அதிக வேகத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் அதிக வேகத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பஸ்கள்
ஏழை, நடுத்தர மக்களின் தவிர்க்க முடியாத போக்குவரத்து வாகனமாக பஸ்கள் உள்ளன. கிராமப்புற மக்களை நகர்ப்புறத்துடன் இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து வாகனமாகவும் பஸ்கள் உள்ளன. இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு பஸ் போக்குவரத்து பெருமளவு கைகொடுக்கிறது.
இதில் அரசு பஸ்கள் சரியான நேரத்தில் வருவதில்லை என்பதுடன் சில நாட்களில் வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால் தனியார் பஸ்கள் நேரம் தவறாமையை சரியாகக் கடைப்பிடிக்கின்றனர்.
அதிக வேகம்
அதுமட்டுமல்லாமல் முறையான பராமரிப்பு, குறைந்த கட்டணம், அதிக வசதி போன்றவை தனியார் பஸ்களில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களின் தேர்வாக தனியார் பஸ்கள் உள்ளது.
ஆனால் சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக தனியார் பஸ்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சமடையும் நிலை உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
விபத்துகள்
'உடுமலை, மடத்துக்குளம் பகுதிகள் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனால் இந்த பகுதிகளில் தினசரி வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. அத்துடன் பல தனியார் பஸ்களில் ஏர் ஹாரன் எனப்படும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தியுள்ளனர்.
ரோட்டில் செல்லும்போது திடீரென்று அதிக ஒலி எழுப்புவதால் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்தில் தடுமாறும் நிலை உள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்கள் அச்சமடையும் நிலை உள்ளது. எனவே தனியார் பஸ்கள் வேகக் கட்டுப்பாட்டுடன் இயங்குவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அத்துடன் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.