'தினத்தந்தி' செய்தியால் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைப்பு
ஆணாய் பிறந்தான் கிராமம் அருகே புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க தினத்தந்தி செய்தி எதிரொலியாக வேகத்தடை அமைக்கப்பட்டது.
திருவண்ணாமலை
ஆணாய் பிறந்தான் கிராமம் அருகே புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க திினத்தந்தி செய்தி எதிரொலியாக வேகத்தடை அமைக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகரை சுற்றி புறவழிச்சாலை (ரிங் ரோடு) அமைக்கப்பட்டு வருகிறது. ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இருந்து பண்டிதப்பட்டிற்கு செல்லும் வழியிலும் இந்த சாலை அமைந்துள்ளது. ஆணாய்பிறந்தான், காவேரியாம்பூண்டி, கணந்தம்பூண்டி, பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துின்றனர்.
இந்த நிலையில் புறவழிச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் சில சமயங்களில் அவ்வழியே கிராம மக்கள் கடந்து செல்லும் போது விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பு சம்பவங்களுக்கு அவ்வபோது நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் அந்த இடத்தில் வேகமாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆணாய்பிறந்தான் புறவழிச்சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பான செய்தி 'தினத்தந்தி'யில் நேற்று வெளியானது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஆணாய்பிறந்தான் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் பேரிகார்டுகள் மூலம் வேகத்தடை அமைத்தனர். இதனால் ஆணாய் பிறந்தான், பண்டிதப்பட்டு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிகாரிகளுக்கும் 'தினத்தந்தி'க்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.