ரூ.11 கோடி செலவு செய்தது வீணாகும் அவலம் பராமரிப்பின்றி காணப்படும் வில்லரசம்பட்டி குளம்;


ரூ.11 கோடி செலவு செய்தது வீணாகும் அவலம்  பராமரிப்பின்றி காணப்படும் வில்லரசம்பட்டி குளம்;
x

வில்லரசம்பட்டி குளம் பராமரிப்பின்றி கிடப்பதால், சீரமைப்பதற்காக செலவிடப்பட்ட ரூ.11 கோடி செலவு செய்தது வீணாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. குளத்தை முறையாக பராமரித்து படகு சவாரி தொடங்க வேண்டும் என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு

வில்லரசம்பட்டி குளம் பராமரிப்பின்றி கிடப்பதால், சீரமைப்பதற்காக செலவிடப்பட்ட ரூ.11 கோடி செலவு செய்தது வீணாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. குளத்தை முறையாக பராமரித்து படகு சவாரி தொடங்க வேண்டும் என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

வில்லரசம்பட்டி குளம்

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வில்லரசம்பட்டி கருவில்பாறைவலசு பகுதியில் 26.65 ஏக்கர் நிலப்பரப்பில் வில்லரசம்பட்டி குளம் உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. குளம் முழுவதும் பாறையாக இருந்ததால் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இந்த குளத்துக்கு கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும், மழை தண்ணீரும் வரும். எனவே வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்போது ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படும்.

இந்தநிலையில் வில்லரசம்பட்டி குளத்தை தூர்வாரி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, நடைபாதை, பூங்கா, படகு சவாரி போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. அதன்பின்னர் குளத்தில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டது. குளத்துக்கு தண்ணீர் வரத்து ஏற்படும் பகுதியில் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டது.

பிரதான கோரிக்கை

குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டது. ஆங்காங்கே இருக்கைகளும் உள்ளன. குளத்தில் படித்துறை அமைக்கப்பட்டு அங்கிருந்து படகு சவாரி தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 2 புதிய படகுகள் வாங்கப்பட்டு குளத்தில் விடப்பட்டன. இதேபோல் குளத்துக்கு அருகில் பொதுமக்கள் பொழுது கழிக்கும் வகையில் பூங்காவும் அமைக்கப்பட்டது.

இந்த பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா அமைக்கும்போது வில்லரசம்பட்டி குளம் புதுப்பொலிவுடன் காணப்பட்டது. பொதுமக்கள் உற்சாகமாக வந்து பூங்காவை பார்வையிட்டு சென்றார்கள். கரையோரமாக நடந்து சென்று குளத்தில் கடல்போல் காட்சி அளிக்கும் தண்ணீரின் அழகையும் ரசித்தனர். ஆனால் குளத்தை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாமல் குளத்தின் நடைபாதையும், பூங்காவும் மூடப்பட்டு கிடக்கிறது. இதை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், படகு சவாரியும் தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

படகு சவாரி

இதுகுறித்து வில்லரசம்பட்டியை சேர்ந்த பொன் நாராயணன் கூறியதாவது:-

வில்லரசம்பட்டியில் உள்ள குளம் ரூ.11 கோடி செலவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. பணிகள் பெயரளவில் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து குளத்தை பராமரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பூங்கா வளாகத்தில் புல், புதர்கள் வளர்ந்து கிடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு கல்லூரி மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் மூலமாக பூங்காவை சீரமைக்கும் பணி நடத்தப்பட்டது. ஆனால் மீண்டும் அதேநிலை தொடர்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் முன்வந்து பூங்காவை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

சீரமைக்கப்பட்ட குளத்தில் படகு சவாரி அமைப்பதற்காக 2 படகுகள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால் திறப்பு விழாவின்போது மட்டுமே படகுகள் இயக்கப்பட்டன. அதன்பிறகு படகுகள் இயக்கப்படவில்லை. படகு சவாரிக்கான ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். ஈரோட்டை சேர்ந்தவர்கள் படகு சவாரி செய்ய வேண்டுமென்றால், ஏற்காடு, கிருஷ்ணகிரி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே படகுசவாரி வந்தால் சிறந்த சுற்றுலா தலமாக மாறிவிடும். பூங்காவை பராமரித்து குறைந்த கட்டணம் வசூலித்தாலும் கொடுப்பதற்கு பொதுமக்கள் தயாராக இருக்கிறார்கள். அங்கு குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான கூடுதல் விளையாட்டு உபகரணங்களை பொருத்த வேண்டும். இந்த குளத்தில் இருந்து அருகில் உள்ள தொழிற்சாலையினர் தண்ணீரை திருடுகிறார்கள். இதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்கா மீண்டும் பராமரிக்கப்படவில்லை என்றால் ஏற்கனவே செலவு செய்த ரூ.11 கோடியும் வீணாகிவிடும் அவலம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆகாயத்தாமரை

வில்லரசம்பட்டி உண்டிகாரப்பாளையத்தை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

இந்த குளத்தில் தற்போது தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்து கிடக்கிறது. இதை அகற்ற வேண்டும். குளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் மூலமாக அந்த பகுதியில் வில்லரசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது. கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயருவதால் விவசாயம் மேற்கொள்ள முடிகிறது. எனவே குளத்தை சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும். மேலும், பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.8 கோடி ஒதுக்கீடு

குளத்தை சீரமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் குமரவேல் கூறியதாவது:-

குளத்தில் உள்ள பூங்காவை சீரமைப்பதற்காக மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தினேன். அப்போது தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார். அதற்கு ஏற்கனவே சிதிலமடைந்த பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைத்து கொடுக்க அனுமதி கேட்டு உள்ளேன். சீரமைத்து கொடுக்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்து உள்ளார். எனவே விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

குளத்தில் சிறிது தூரத்துக்கு மட்டுமே நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. குளத்தை சுற்றிலும் முழுமையாக நடைபாதை அமைக்கப்படும். இதற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தண்ணீர் வரத்து குறைந்ததும், இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இது அமைக்கப்பட்டால் குளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைந்து விடும். இதன் மூலமாக தண்ணீர் திருட்டு முழுமையாக கட்டுப்படுத்தப்படும். குளத்துக்கு தண்ணீர் வரத்து ஏற்படும் ஓடை கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் தூர்வாரப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்லும் ஓடை தூர்வாரப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story