சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை அவசியம்
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை அவசியம்
போடிப்பட்டி
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் படிப்படியாக சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள்
இதுகுறித்து சமூக ஆர்வலர் கோபால் கூறியதாவது:-
'வெளி நாட்டில் இருந்து வரமாக எண்ணிக் கொண்டு வரப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் இன்று சாபமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலங்களில் நமது மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதில் சீமைக்கருவேல மரங்களின் பங்கு பெருமளவு இருந்தது. தற்போது சமையல் கியாஸ் பயன்பாடு அதிகரித்ததால் எரிபொருள் தேவைக்காக இவற்றை வெட்டுவது குறைந்ததும் இவற்றின் அபரிதமான பெருக்கத்துக்கு முக்கிய காரணமாகும்.
தற்போது கைவிடப்பட்ட விவசாய பூமிகள் மற்றும் நீர்நிலைகளில் அதிக அளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இவற்றின் வேர்கள் நிலத்தின் ஆழம் வரை சென்று நீரை உறிஞ்சி விடுவதால் அருகிலுள்ள மற்ற தாவரங்கள் தண்ணீர் கிடைக்காமல் அழியும் நிலை ஏற்படுகிறது. இதனால் நமது பாரம்பரிய மூலிகைத் தாவரங்கள் பலவும் அழிவின் பிடியில் சிக்கியுள்ளன.
மேலும் மழைப் பொழிவு குறைவான காலங்களில் தனது நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இவை காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் மழைப் பொழிவு மேலும் குறையும் சூழல் ஏற்படுகிறது. சீமைக்கருவேல மரங்களில் பக்க வேர்கள் மிகவும் வலுவானதாக உள்ளதால் மழைநீர் பூமிக்குள் செல்வதைத் தடுத்து நிலத்தடி நீராதாரத்தைப் பாதிக்கிறது. பொதுவாக மரங்கள் அதிக அளவில் ஆக்ஜிசனை வெளியிட்டு உயிர்களின் சுவாசத்துக்கு உதவுகிறது.
ஆனால் சீமைக்கருவேல மரங்களைப் பொறுத்தவரை அதிக அளவில் கார்பன்டை ஆக்ஸைடை வெளியிட்டு உயிர்களுக்கு தீங்கு செய்வதாக உள்ளது. இதில் பல தகவல்கள் ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்படாதவை என்று கூறப்பட்டாலும் மனிதர்களுக்கு அதிக அளவில் இடையூறு ஏற்படுத்தக்கூடிய தாவரமாகவே சீமைக்கருவேல மரங்கள் உள்ளது.
யானைகளுக்கு பிடித்த பழம்
தற்போதைய நிலையில் நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்கள், விவசாய நிலங்கள், சாலையோரங்கள் என்று பல இடங்களில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் வனப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இந்த மரத்தின் பழங்கள் உள்ளது. எனவே இவற்றை சாப்பிடுவதற்காக அடிவாரப் பகுதிக்கு வரும் காட்டு யானைகள் அருகிலுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை, கரும்பு, தென்னை போன்ற பயிர்களைப் பாழாக்குகின்றன.
வனப்பகுதி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்தால் மற்ற தாவரங்கள் அழிந்து மான், காட்டெருமை உள்ளிட்ட தாவர உண்ணிகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.இதனால் உயிர்ச் சுழற்சி பாதிக்கப்பட்டு மிகப் பெரிய சிக்கலை உருவாக்கக் கூடும். .எனவே சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை அகற்றுவதற்கான நிதி ஒதுக்குவதில் அரசுக்கு சிரமங்கள் ஏற்படலாம். இதனைக் கருத்தில் கொண்டு அரசுத் துறைகளுடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள் செயல்பட முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.