குமரியில் அதிகாரிகள் தொடர் சோதனை: 2 ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
குமரியில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை தொடர்கிறது. 2 ஓட்டல்களில் இருந்து நேற்று கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
குமரியில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை தொடர்கிறது. 2 ஓட்டல்களில் இருந்து நேற்று கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்டு மாணவி பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குமார பாண்டியன், பிரவீன் ஆகியோர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 6 ஓட்டல்களில் ரசாயன பொடி சேர்த்த கோழி இறைச்சி, கெட்டுப்போன இறைச்சி என மொத்தம் 25 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட 6 ஓட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நாகர்கோவில், தக்கலை உள்பட மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் இந்த சோதனை நடந்தது. அப்போது நாகர்கோவில் கேப் ரோட்டில் ஒரு ஓட்டலிலும், தக்கலையில் ஒரு ஓட்டலிலும் கெட்டுப்போன இறைச்சி இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 ஓட்டல்களிலும் இருந்து மொத்தம் 5 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பின்னர் அந்த ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 5 ஓட்டல்களில் இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தஞ்சாவூரில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.