ஈரோட்டில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல விளையாட்டு போட்டி: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அணிகள் சாம்பியன்


ஈரோட்டில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல விளையாட்டு போட்டி: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அணிகள் சாம்பியன்
x

ஈரோட்டில் நடந்த தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் நடந்த தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.

மண்டல அளவிலான போட்டி

தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் கடந்த 2 நாட்கள் நடந்தது. முதல் நாளில் தீயணைப்பு வீரர்களுக்கு துறை ரீதியான திறன் மேம்பாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கயிறு ஏறுதல், ஏணி ஏறுதல், நீர்விடு குழாய் போட்டி, நீச்சல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

2-வது நாளான நேற்று முன்தினம் கூடைப்பந்து, இறகுபந்து, வாலிபால், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர், 400 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்ட பந்தயம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பரிசளிப்பு விழா

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் கோவை மேற்கு மண்டல தீயணைப்பு -மீட்புபணிகள் துறை இணை இயக்குனர் சத்தியநாராயன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கினார்.

இதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். மேலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.


Next Story