வாழ்க்கையில் வெற்றிபெற கல்வியுடன் விளையாட்டு அவசியம்
வாழ்க்கையில் வெற்றி பெற கல்வியுடன் விளையாட்டு அவசியம் என ஆசிய ஆண்கள் சாம்பியன்ஷிப் கோப்பை வரவேற்பு நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
கோப்பைக்கு வரவேற்பு
சென்னையில் 7-வது ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 3-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான கோப்பை மாவட்டம்வாரியாக கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட கோப்பைக்கு ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வரவேற்பு அளித்து, அறிமுகம் செய்து வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
விளையாட்டு வீரர்களுக்கு அதிகமான ஊக்கம் கொடுக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 6 நாடுகள் பங்கேற்கின்ற இந்த போட்டியானது 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த கோப்பை எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பான வரவேற்பு அளித்து, காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வியுடன் விளையாட்டு அவசியம்
அதன்படி இன்றைய தினம் நமது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனைவருக்கும் விளையாட்டு போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கல்வியுடன் விளையாட்டும் அவசியம் என்பதை உணர்த்துகின்ற வகையில் கோப்பை காட்சிப்படுத்தப் படுகிறது.
விளையாட்டு வீரர்களின் கனவு ஒலிம்பிக் பதக்கமாகத்தான் இருக்கும். விளையாட்டில் ஈடுபடுவதால் பொறாமை இருக்காது. தோற்றுவிட்டாலும் மற்றவர்களை பாராட்டக்கூடிய பக்குவம் தருவது விளையாட்டுத்துறை மட்டும் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், நகராட்சி ஆணையர் பழனி, நகர செயலாளர் அன்பழகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.