மன்னார்குடியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
மன்னார்குடியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.
மன்னார்குடியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.
விளையாட்டு போட்டிகள்
மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா, குடியரசு தின விழாவினை முன்னிட்டு குறுவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் மன்னார்குடியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கு நடைபெறும் இப்போட்டிகளில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஒன்றியங்களை சேர்ந்த 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.
கல்வி அலுவலர்
மன்னார்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பின்லே மேல்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப்பள்ளி, சாய்னா உள் விளையாட்டு அரங்கம் என நான்கு இடங்களில் இப்போட்டிகள் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த கபடி, கால்பந்து மற்றும் இறகு பந்து போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட அளவிலான போட்டி...
போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கும், அணிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், குறுவட்டஅளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களும், அணிகளும் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், குறுவட்ட செயலாளர் மகேஸ்வரி, துணை செயலாளர் செந்தில் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.