பெண்களுக்கான விளையாட்டு போட்டி
ஏற்காடு கோடை விழாவில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
ஏற்காடு
ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி தொடங்கியது. 3-வது நாளான நேற்று மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி மற்றும் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய திரையரங்கில் நடைபெற்ற திண்டுக்கல் அசோக்கின் மேஜிக் ஷோ, கவிஞர் நன்மாறன் நாடக நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
மகளிர் திட்டம், சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ஏற்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் ஜெனிபர் சோனியா தலைமையில் பெண்களுக்கான எறிபந்து, ஓட்டப்பந்தயம், பால் பாசிங் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு விளையாடினர். ஏற்காடு பேஷன் ஷோ மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் ஏற்காடு உள்ளூர் இளைஞர்களுக்கு கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மலர் கண்காட்சியின் நிறைவு நாளான 28-ந் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.