மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி; கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விளையாட்டு போட்டியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் முன்னிலையில் நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் பயிலும் 210 மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இப்போட்டிகளில் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் மாணவ- மாணவிகளுக்கு குறிப்பிட்ட பொருட்களை சேகரித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் மற்றும் 2-ம் இடம்பிடிக்கும் மாணவ- மாணவிகள் வருகிற 1-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்வார்கள். சென்னையில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு 3-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் சென்னையில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் மற்றும் சிறப்பு பள்ளி தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.