பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி
ஆலங்குளம் அருகே சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் வெள்ளி விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியின் தொடக்க விழாவுக்கு கல்லூரியின் தாளாளர் ஜேசு ஜெகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் வில்சன் முன்னிலை வகித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார். நெல்லை திருமண்டல மேற்கு சபை மன்ற தலைவர் பிரே ஜேம்ஸ் தொடக்க ஜெபம் செய்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ., ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ், பெற்றோர்கள், பேராசிரியர்கள், பேராசிரியைகள், அலுவலக ஊழியர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.