மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்


கரூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கரூர்

விளையாட்டு போட்டிகள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.

இதில் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகளில் (ஆண், பெண்) 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல், 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதல், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயம் 4 X 400 மீட்டர் போட்டிகளும் நடைபெற்றன.

குண்டு எறிதல்

பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகளில் 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான நின்று நீளம் தாண்டுதல், குறைவாக பார்வைத்திறன் உள்ளவர்களுக்கு 100 மீட்டர் (ஆண்கள்) ஓட்டப்பந்தயமும், 50 மீட்டர் (பெண்கள்) ஓட்டப்பந்தயமும், 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு குண்டு எறிதல், குறைவாக பார்வைத்திறன் உள்ளவர்களுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடந்தன.

16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வட்டு எறிதல், குறைவாக பார்வைத்திறன் உள்ளவர்களுக்கு 200 மீட்டர் (ஆண்கள்) ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் (பெண்கள்) ஓட்டப்பந்தயமும், 15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் (சிறப்புப்பள்ளிகள்) ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டிகளும், பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் (ஆண்கள், பெண்கள்) 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடைபெற்றன.

ஓட்டப்பந்தயம்

மேலும், கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான (நடக்கும் சக்தியற்றவர்களுக்கு) (உதவி உபகரணங்களின் உதவியுடன்) (ஆண், பெண்) 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான 50 மீட்டர் நடைப்பந்தயமும், 15 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான 3 சக்கர வண்டி உதவியுடன் (ஆண்கள்) 150 மீட்டர் ஓட்டப்பந்தயமும், (பெண்கள்) 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் (ஆண்கள், பெண்கள்) சக்கர நாற்காலி உதவியுடன் 75 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடைபெற்றன.

கைகள் பாதிக்கப்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகளில் 12 வயது முதல் 14 வயது உள்ளவர்களுக்கான (ஆண், பெண்) 50 மீட்டர் நடைப்பந்தயமும், 15 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும் (ஆண்கள்), 75 மீட்டர் ஓட்டப்பந்தயமும் (பெண்கள்), 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் (ஆண்கள்) 200 மீ. ஓட்டப்பந்தயமும், 100 மீ. ஓட்டப்பந்தயமும் (பெண்கள்) நடைபெற்றன.

மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

மனவளர்ச்சி குன்றியோருக்கான போட்டிகளில் 12 வயது முதல் 14 வயது உள்ளவர்களுக்கான (ஆண், பெண்) நின்று நீளம் தாண்டுதலும், 15 வயது முதல் 17 வயது உள்ளவர்களுக்கான (ஆண், பெண்) ஓடி நீளம் தாண்டுதலும், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான (ஆண், பெண்) 100 மீட்டர் நடைப்பந்தயமும், ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 12 வயது முதல் 14 வயது உள்ளவர்களுக்கான (ஆண், பெண்) உருளைக்கிழங்கு சேகரித்தல், 15 வயது முதல் 17 வயது உள்ளவர்களுக்கான (ஆண், பெண்) கிரிக்கெட் பந்து எறிதல், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான (ஆண், பெண்) தடை தாண்டி ஓடும் போட்டிகளும் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுவான போட்டி ஆண்களுக்கு 800 மீ. ஓட்டப்பந்தயமும், பெண்களுக்கு 400 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடைபெற்றன.

இப்போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவுகளில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.


Next Story