பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
x

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவையொட்டி 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் புதிய விளையாட்டுகளாக மாணவர்களுக்கு லாங் டென்னிஸ், வளையப்பந்து, கேரம் ஆகிய போட்டிகள் ஒற்றையர், இரட்டையர் பிரிவிலும் மற்றும் குத்துச்சண்டை போட்டியும் நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கேரம் விளையாட்டில் 14 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் பாடாலூர் அரசு மாதிரி பள்ளியும், இரட்டையர் பிரிவில் இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியும் முதலிடம் பிடித்தன. 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் இரூர் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. 17, 19 வயதுகளுக்குட்பட்ட இரட்டையர் பிரிவுகளில் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. வளையப்பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவிலும், 17 19 வயதுகளுக்குட்பட்ட ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளிலும் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. 14 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. குத்து சண்டை போட்டிகளில் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிகம் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றனர். அவர்களுக்கு பதக்கம், சான்றிதழை மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை லெப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். மேலும் போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகளும், வீரர்களும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை (புதன்கிழமை) பள்ளி மாணவர்களுக்கான சிலம்பம், ஜூடோ, சாலையோர மிதிவண்டி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.


Next Story