மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்


மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:46 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பொங்கல் விழா நடந்தது. இதில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பொங்கல் விழா நடந்தது. இதில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

பொங்கல் விழா

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் அடுத்த வாரம் 17-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு நேற்று பொங்கலிட்டனர்.

கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள் கரும்புகளை நட்டு வைத்து புது பானைகளில் பொங்கலிட்டனர். தொடர்ந்து பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு கோல போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் சிறந்த கோலங்கள் வரைந்த மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் அய்யப்பன் பரிசுகள் வழங்கினார். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

விளையாட்டு போட்டிகள்

இதேபோல் பார்வுட், ஸ்ரீமதுரை, தேவர்சோலை, தேவாலா, புளியம்பாரா. பந்தலூர், சேரம்பாடி, கொளப்பள்ளி, மசினகுடி உள்பட அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் பொங்கல் விழா நடைபெற்றது. மேலும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. குன்னூரில் உள்ள முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. அங்குள்ள முதியவர்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில் முதியவர்கள் பாட்டு பாடியும், கும்மியடித்தும் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து முதியவர்கள் கூறுகையில், யாரும் இல்லாமல் ஏக்கத்துடன் வாழ்ந்து வரும் எங்களுக்கு, பொங்கல் விழா கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. விழாவை எங்களுடன் கொண்டாடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.


Next Story