டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பு


டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பு
x

எலவம்பட்டி கிராமத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

டிரோன் மூலம்

கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை, இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட நானோ யூரியா உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை டிரோன் மூலம் பயிர்களுக்கு தெளிக்கும் முறையை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து கந்திலி ஊராட்சி ஒன்றியம் செவ்வாத்தூர் ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 22 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றப்பட்டு, வேளாண் பொறியியல் துறையால் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு, சொட்டுநீர் பாசனம் அமைத்து 3 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டுள்ள மாஞ்செடிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து கலெக்டர்கூறியதாவது:-

குறைந்த கட்டணம்

கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் முதல் முறையாக எலவம்பட்டி கிராமத்தில் வேளாண்ம, உழவர் நலத்துறை, இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் சார்பில் தயார் செய்யப்பட்ட நானோ யூரியா உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை டிரோன் மூலமாக பயிர்களுக்கு தெளிக்கும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மண்ணின் மூலமாக உரம் வைப்பதால் பயிர்களுக்கு தேவையான சத்து சேர்வதற்கு காலதாமதம் ஏற்படும். இதனால் மண்ணின் வளமும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

டிரோன் மூலமாக இலைத்தெளிப்பான் முறையை பயன்படுத்தும் பொழுது, ஒரேசீராக எல்லா பயிர்களுக்கும் நாம் தெளிக்க முடியும். இந்த நானோ யூரியாவை விவசாயிகள் பயன்படுத்தும் பொழுது 50 சதவீத யூரியாவை வாங்கி பயன்படுத்த தேவையில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.600 வரை செலவாகும். இதனை பயன்படுத்தும் பொழுது மிகக்குறைவான கட்டணத்தில் உரம் தெளிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் பயிருடைய வளர்ச்சியும் வேகமாக இருக்கும். விவாசாயிகளுக்கு ஆட்கள் பற்றாகுறை இருந்தாலும் இதனை விவசாயிகள் தெளித்துகொள்ள முடியும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குநர் சித்ராதேவி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, துணை இயக்குனர் பச்சையப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன், உதவி இயக்குனர்கள் ராகினி, அப்துல் ரகுமான், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்


Next Story