தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணி மும்முரம்


தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொப்புள நோயை கட்டுப்படுத்த தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கொப்புள நோயை கட்டுப்படுத்த தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கொப்புள நோய் தாக்குதல்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. 60 ஆயிரம் சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மே மாத இறுதி முதல் தொடர் மழை பெய்து வந்தது. மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிலவி வந்ததால், தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டது. மேலும் செடிகளில் கொப்புள நோய் தாக்கி வந்தது. இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்துகளை தாக்கியதால், 50 சதவீதம் வரை மகசூல் குறைந்தது.

ஏற்கனவே பச்சை தேயிலையின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து உள்ள நிலையில், தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பும் ஏற்பட்டு வந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்யாமல், போதுமான சூரிய வெளிச்சத்துடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

மருந்து தெளிப்பு

இதனால் விவசாயிகள் தேயிலை செடிகளில் கொப்புள நோயை கட்டுப்படுத்த, தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்களின் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் எக்ஸோ கன்சோல் 200 மில்லி, காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் மும்முரமாக வருகின்றனர்.

மேலும் பிராப்பிகானாசோல் 125 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை விசைத்தெளிப்பான் மூலம் தெளித்து வருகின்றனர். இதன் மூலம் கொப்புள நோய் கட்டுப்படுவதுடன், பச்சை தேயிலை மகசூல் கணிசமாக அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.



Next Story