இலங்கை அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சாமி தரிசனம்
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் இலங்கை அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சாமி தரிசனம் செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், சபரிமலை, அச்சன்கோவில், பந்தளம், குளத்துப்புழை, ஆரியங்காவு ஆகிய இடங்களில் ஐந்து கோலங்களில் வீற்றிருக்கும் அய்யப்பனுக்கு மூலஸ்தானமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர்.
இந்த கோவிலில் நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். குறிப்பாக இலங்கையில் இருந்து திரளான அய்யப்ப பக்தர்கள் வந்தனர். அவர்கள் இருமுடி கட்டி தரிசனம் செய்து சபரிமலைக்கு புறப்பட்டனர். முன்னதாக பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் அவர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து இலங்கை சேனரத்தனபுரி மாவட்டத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் கருணாநிதி (வயது 63) கூறுகையில், 'நாங்கள் விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து பஸ் அமர்த்தி இங்கு வந்துள்ளோம். கடந்த 29 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறோம். ஆரம்பத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து இருமுடி கட்டி சென்றோம். தொடர்ந்து பக்தர்கள் மூலமாக கிடைத்த தகவலின் பேரில் இங்கிருந்து சுமார் 12 ஆண்டுகளாக இருமுடி கட்டி செல்கிறோம். இங்கு வருவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இதனால் எங்களுக்கு மனநிறைவாக உள்ளது. இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி பாதிப்பு மாறி நிலைமை சரியாக வேண்டும் என்று அய்யப்பனை வேண்டுகிறோம்' என்றார்.