இலங்கை பெண் அகதிகள் தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீர் மறியல்


இலங்கை பெண் அகதிகள் தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீர் மறியல்
x

இலங்கை பெண் அகதிகள் தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

தண்ணீரின்றி அவதி

திருச்சி மாவட்டத்தில் கொட்டப்பட்டு மற்றும் வாழவந்தான்கோட்டை பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் அமைந்துள்ளன. கொட்டப்பட்டு முகாமில் சுமார் 466 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த முகாமில் சாக்கடை வசதி, சாலை வசதி, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று இங்குள்ள முகாம் வாசிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 4 மாதமாக சாதாரண உபயோகத்துக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீருக்கு வினியோகம் செய்யப்படும் காவிரி தண்ணீரையே இவர்கள் பாத்திரம் கழுவ, துணி துவைக்க, குளிக்க பயன்படுத்துகிறார்கள். கழிவறைக்கும் குடிநீரையே பயன்படுத்துகிறார்கள். இதனால் 4 மணி நேரம் வினியோகிக்கப்படும் குடிநீரை பிடிக்க குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக இங்குள்ள இலங்கை தமிழர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

திடீர் சாலை மறியல்

இதுபற்றி வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று மதியம் திடீரென திருச்சி-புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்தனர்.

அப்போது, தேவையான அளவு தண்ணீர் தடையின்றி கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Next Story