ஸ்ரீ வைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி


ஸ்ரீ வைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய   தேர் பவனி
x

ஸ்ரீ வைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சந்தியாகப்பரின் சொருபம் குருசுகோவிலிருந்து கிறிஸ்துவகீதங்கள், இசை வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க பக்தர்கள் கொடியேந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் கொடியேற்றத்துடன் கோலாகலமாக திருவிழா தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், நற்கருனை ஆராதனையும் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் ஆலயத்தில் காலை, மாலையில் சிறப்புத்திருப்பலிகள் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதில், பங்குஇறைமக்கள்மற்றும் கடலோர கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர்.

நேற்று 10-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணி, காலை 5.15 மணி, காலை 6 மணி, காலை 7 மணிக்கு கூட்டு திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.

தேர்ப்பவனி

காலை 10 மணிக்கு சிறப்பு திருப்பலிகளை தொடர்ந்து காலை 10.45மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட தேர்பவனியின் போது மிக்கேல் தூதர் முன் செல்ல சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும், ஆலயத் திருத்தேரில் மாதாவும் நான்கு வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் கிறிஸ்தவர்கள் உப்பு, மிளகு, மலர் தூவி வணங்கினர். பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனைநடைபெற்றது.

மீனவ மக்கள் குவிந்தனர்

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குருசுகோவில் ஆலய பங்குதந்தை கிஷேக் மற்றும் அருட்சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக் கமிட்டியினர், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர். இந்த தேரோட்ட விழாவில் உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, பெரியதாழை, இடிந்தகரை, தூத்துக்குடி, அமலிபுரம் உள்ளிட்ட கடலோர மீனவமக்கள் தங்களது குடும்பத்துடன் அங்கேயே குடில் அமைத்து தங்கியிருந்தும், வாகனங்களில் திரளாக வந்தும் கலந்து கொண்டனர். இன்று(ெசவ்வாய்க்கிழமை) காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.


Next Story