பொறுப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை


பொறுப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 12 July 2022 9:58 PM IST (Updated: 13 July 2022 11:09 AM IST)
t-max-icont-min-icon

பொறுப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை

திருப்பூர்

திருப்பூர்

பேட்டரி வாகனம் வாங்கிய முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடந்துள்ளது. பொறுப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் உறுதி கூறினார்.

பேட்டரி வாகன முறைகேடு

திருப்பூர் மாநராட்சி மாமன்ற கூட்டம் நேற்று மதியம் மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர் ராஜேந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு) :-

தெருவிளக்குகள் பழுதடைந்தால் அவற்றை சீரமைக்க ஒப்பந்தாரரிடம் புகார் கூறினால் அந்த மின்கம்பம் எந்த இடத்தில் இருக்கிறது என்று நாம் அழைத்துச்செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் மின்கம்பங்களுக்கு எண்கள் குறிப்பிட்டு அடையாளப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் தெருவிளக்கு பழுதை சீரமைக்காவிட்டால் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பேட்டரி வாகனங்கள் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக கடந்த கூட்டத்தில் தெரிவித்தோம். நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினோம். விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எத்தனை வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். விசாரணை விவரம், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனங்கள் பழுதடைந்து ஒர்க்‌ஷாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் வாகன ஒர்க்‌ஷாப் அமைத்தால் வாகனங்களை தாமதமின்றி பழுதுநீக்க வசதியாக அமையும்.

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கவுன்சிலர் செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு) :-

கடந்த ஆட்சியில் பேட்டரி வாகனங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் சேகர் (அ.தி.மு.க.) :-

கடந்த ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகம் தனி அதிகாரி தலைமையில் நடந்தது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைபாடு.

கவுன்சிலர் நாகராஜ் (ம.தி.மு.க.) :-

புதிய பஸ் நிலையத்துக்கு அண்ணா பெயரையும், தெற்கு பகுதி பஸ் நிலையத்துக்கு பெரியார் பெயரையும் சூட்ட வேண்டும். வரி உயர்வு செய்து, குப்பை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வார்டுகளில் சேகரமாகும் குப்பையை அள்ள முடியாமல் வாகன பற்றாக்குறை, துப்புரவு தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. டிராக்டர் போதுமான அளவு இல்லை. இதனால் குப்பையை அகற்ற முடியவில்லை. பாதாள சாக்கடை அமைக்க தோண்டிய குழியை சரிவர மூடாமல் சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. குடிநீர் குழாய் சேதமடைந்தால் அதை சீரமைத்து கொடுப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் என்று கூறிவிட்டு தற்போது குடிநீர் வினியோகம் செய்ய 1 வாரத்துக்கு மேல் ஆகிறது.

அங்கன்வாடி மையம்

கவுன்சிலர் குணசேகரன் (பா.ஜனதா) :-

பாதாள சாக்கடைக்கு குழாய் பதிக்க குழி தோண்டும்போது குடிநீர் குழாய் சேதமடைகிறது. அதை ஒப்பந்தாரர்கள் சீரமைத்தால் மீண்டும் உடைகிறது. அதன்பிறகு மாநகராட்சி ஊழியர்கள் வந்து கசிவை சீரமைக்கிறார்கள். சாமுண்டிபுரம் ரோட்டில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மாநகராட்சி ஊழியர் முன்னிலையில் தோண்டி, குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.

கவுன்சிலர் தங்கராஜ் (அ.தி.மு.க.)

25-வது வார்டில், டிப்பர், லோடர், டிராக்டர் போன்றவை வார்டுக்கு சரிவர வரவில்லை. குப்பை அதிகமாக தேங்கி கிடக்கிறது. துப்புரவு தொழிலாளர்கள் காலை 11 மணிக்கு மேல் வேலை செய்யாமல் சென்று விடுகிறார்கள். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் (பா.ஜனதா) :-

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பின்புறம் கழிவுநீர் வடிகால் வசதியில்லாமல் சாக்கடை தேங்கி நிற்கிறது. அதை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் செரங்காடு அங்கன்வாடி மையத்தில் சிறிய அறையில் 50 குழந்தைகள் படிக்கிறார்கள். போதுமான கழிப்பிட வசதியில்லை. தகுந்த வசதியுடன் வாடகை கட்டிடத்திலாவது அங்கன்வாடி மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலைகள் சுருங்கியது

கவுன்சிலர் ரவிச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு) :-

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கான்கிரீட் சாலை என்ற பெயரில் 60 அடி அகலமுள்ள ரோட்டை, 30 அடிக்கு மட்டும் கான்கிரீட் தளம் அமைக்கிறார்கள். மீதம் உள்ள இடத்தில் கற்களை பதிக்கிறார்கள். சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மாநகரில் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையை சுருக்கி விட்டனர். பாதாள சாக்கடை பணி செய்யும்போது கவுன்சிலருக்கு தெரிவிப்பது இல்லை.

ஆணையாளர் கிராந்திகுமார் பாடி:-

பேட்டரி வாகனங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, வாகனத்தை வாங்கிய நிறுவனம், உதவி ஆணையாளர், சுகாதார அதிகாரி ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டு மாயமான வாகனத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அபராதம் மற்றும் பேட்டரி வாகனத்துக்கான தொகையை திரும்ப பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருக்கின்ற வாகனங்களின் உதிரிபாகங்களை சீரமைத்து வார்டுகளுக்கு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

மேயர் தினேஷ்குமார்:-

ஆவணங்களில் 479 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டதாக உள்ளன. ஆனால் 202 வாகனங்கள் மட்டுமே கணக்கில் இருக்கிறது. அதிலும் பழுதடைந்த வாகனங்கள் பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. மிகவும் துல்லியமாக விசாரணை நடந்து வருகிறது. மாயமான பேட்டரி வாகனங்களை திரும்ப பெறுவதற்கு, மாநகராட்சி பொதுநிதியில் இருந்தோ, வேறு எந்த நிதியில் இருந்தோ செலவு செய்யப்படாது. சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து உரிய தொகை பெறப்படும். விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



Next Story