ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்
கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சித்திரை தேர்த்திருவிழா
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் வெகுசிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ேதரோட்டம்
சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 14-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று முன்தினம் காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்தார். மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.30 மணியளவில் சித்திரைத்தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதையடுத்து காலை 5.15 மணிக்கு மீன லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழசித்திரைவீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்குசித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரைவீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 9.30 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.
அன்னதானம்
சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்திருந்தனர்.
இன்று (வியாழக்கிழமை) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்படும், நாளை (21-ந் தேதி) இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.