கவுந்தப்பாடி அருகே பரபரப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மாற்றக்கோரி போராட்டம்


கவுந்தப்பாடி அருகே பரபரப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மாற்றக்கோரி போராட்டம்
x

கவுந்தப்பாடி அருகே பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மாற்றக்கோரி மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மாற்றக்கோரி மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

கவுந்தப்பாடி அருகே உள்ள பொம்மன்பட்டியில் பவானி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 64 மாணவர்கள், 70 மாணவிகள் என 134 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 6 பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த பள்ளிக்கூடத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மாற்ற வேண்டும் எனக்கோரி மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள், நேற்று காலை பள்ளிக்கூடம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்ததும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நீலகண்டன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், 'இந்த பள்ளிக்கூடத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் தான் நிர்வாகிகளாக இருக்க வேண்டும். ஆனால் இந்த பள்ளிக்கூடத்தில் படிக்காத மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் சிலர் நிர்வாகிகளாக உள்ளனர். எனவே இந்த சங்கத்தில் உள்ள நிர்வாகிகளை மாற்ற வேண்டும்,' என்றனர்.

பரபரப்பு

அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், 'இதுகுறித்து சென்னையில் உள்ள கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இந்த போராட்டம் காரணமாக 2 மணி நேரம் பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் நடைபெறவில்லை என பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் பள்ளிக்கூடம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story