எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 16,087 மாணவ- மாணவிகள் எழுதினர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16,087 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தமிழ்நாட்டில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8,257 மாணவர்கள், 7,830 மாணவிகள் என மொத்தம் 16,087 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களுக்காக 79 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ராணிப்பேட்டை எல்.எப்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடந்த தேர்வையும், மாற்றுத்திறனாளி மாணவிகள் உதவியாளர் உதவியுடன் தேர்வு எழுதியதையும் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
16,087 மாணவ- மாணவிகள்
வருகிற 20-ந் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்காக 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் காவல்துறை பாதுகாப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8,257 மாணவர்கள், 7,830 மாணவிகள் என மொத்தம் 16,087 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் என 159 தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 1096 ஆசிரியர்களும், நிலையானபடை மற்றும் பறக்கும்படை உறுப்பினர்களாக 102 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுத 194 நபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்கள் அனைத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுள்ளது. தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
பறக்கும்படை
மாணவர்கள் தேர்வு எழுதுவதை கண்காணிக்க வருவாய்துறை அலுவலர்கள் பறக்கும் படையினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, மாவட்ட கல்வித்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் உஷா உடனிருந்தார்.