எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 18,663 மாணவர்கள் எழுதுகின்றனர்
வேலூர் மாவட்டத்தில் 104 மையங்களில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 18 ஆயிரத்து 663 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள்
தமிழகத்தில்எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த மாதம் 20 முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் 8 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
18,663 மாணவ-மாணவிகள்...
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9,540 மாணவர்கள், 9,123 மாணவிகள் என்று மொத்தம் 18 ஆயிரத்து 663 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக 104 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வை மையங்களை கண்காணிக்க 104 முதன்மை கண்காணிப்பாளர்கள், 104 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வில் காப்பி அடிப்பவர்களை பிடிக்கவும், ஆள்மாறாட்டத்தை கண்டறியவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 104 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையிலான குழுவினரும் தேர்வு மையங்களில் திடீர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். வினாத்தாள்கள் 21 வழித்தடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
பதிவெண்கள் எழுதும் பணி
முதல் தேர்வாக இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பாக மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும். முதலில் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கு 10 நிமிடங்கள், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கும் 5 நிமிடம் அனுமதி வழங்கப்படும். தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிவரை நடைபெறும்.
அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தேர்வு நடைபெறும் 104 மையங்களிலும் தடையின்றி மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன.
29 கைதிகள் தேர்வு எழுத ஜெயிலில் ஏற்பாடு
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள், பெண்கள் ஜெயிலில் 800-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தண்டனை கைதிகள் பொதுத்தேர்வு எழுதுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 2 பெண் கைதிகள், 27 ஆண் கைதிகள் என்று மொத்தம் 29 கைதிகள் எழுத உள்ளனர். அவர்கள் தேர்வு எழுத ஆண்கள் ஜெயிலில் உள்ள அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
======