எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: சேலம் மாவட்டத்தில் 91.13 சதவீத மாணவர்கள் தேர்ச்சி


சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.13 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.1 சதவீதம் அதிகமாகும்.

சேலம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் 2022-2023 கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 179 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உண்டு உறைவிட பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 537 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 835 மாணவர்களும், 21 ஆயிரத்து 593 மாணவிகளும் என மொத்தம் 43ஆயிரத்து 428 பேர் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை எழுதினர்.

தேர்வு முடிவுகள்

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்ட தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் வெளியிட்டார். அப்போது, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம் (சேலம்), தங்கவேல் (சங்ககிரி), உதயகுமார் (தனியார் பள்ளிகள்), சந்தோஷ் (தொடக்க-நடுநிலைப்பள்ளி) ஆகியோர் உடனிருந்தனர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்த வரையில் 19 ஆயிரத்து 168 மாணவர்களும், 20 ஆயிரத்து 410 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 578 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 91.13 ஆகும். 87.79 சதவீதம் மாணவர்களும், 94.52 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 3,850 பேர் தேர்ச்சி பெறவில்லை. கடந்த ஆண்டு (2022) நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாவட்டத்தில் 89.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.1 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இருந்தபோதிலும் தமிழக அளவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு 16-வது இடத்தை பெற்றிருந்த சேலம் மாவட்டம், இந்த ஆண்டு 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்கள்

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் 288 பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 230 மாணவர்களும், 13 ஆயிரத்து 291 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 521 பேர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை எழுதினர். இவர்களில் 10 ஆயிரத்து 216 மாணவர்கள், 12 ஆயிரத்து 288 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 85.09 சதவீதம் ஆகும்.

அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி 80.26 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி 89.93 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 79.01 சதவீதம் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி சதவீதம் இருந்தநிலையில் இந்தாண்டு 6.08 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் தங்களது பள்ளிக்கூடத்திற்கு ஆர்வமுடன் சென்றனர். பின்னர் அவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளோம் என்று மதிப்பெண் பட்டியலை பார்த்தனர். சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குகை மூங்கப்பாடி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உற்சாகமாக துள்ளிக்குதித்தும், தங்களது ஆசிரியர், ஆசிரியைகளுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். இதனிடையே, பள்ளி கல்வித்துறை சார்பில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களது செல்போன்களில் தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொண்டனர்.

ஆனந்த கண்ணீர்

சேலம் குகை மூங்கப்பாடி மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியை சித்ரா என்பவர், கணித பாடத்தில் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்த சந்தோஷத்தில் அவர்கள் முன்னிலையில் ஆனந்த கண்ணீர் வடித்தார். இதனை பார்த்த மாணவிகள் ஆசிரியையின் கண்ணீரை துடைத்து விட்டு அவருக்கு சாக்லெட் கொடுத்து ஆசி பெற்றனர்.


Next Story