எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நிறைவடைந்தது: மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவடைந்ததையொட்டி ஈரோட்டில் மாணவர்கள் கேக் வெட்டியும், சட்டையில் பேனா மை தெளித்தும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவடைந்ததையொட்டி ஈரோட்டில் மாணவர்கள் கேக் வெட்டியும், சட்டையில் பேனா மை தெளித்தும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
பொதுத்தேர்வு
தமிழ்நாட்டில் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நேற்று நிறைவு பெற்றன. தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டதால் மாணவ- மாணவிகள் நேற்று தேர்வு அறைகளை விட்டு உற்சாகமாக வெளியே வந்தனர். ஈரோட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடந்த பள்ளிக்கூடங்களில் தேர்வு முடிந்ததும் மாணவ- மாணவிகள் வழக்கத்தை விட உற்சாகமாக வெளியே வந்தனர்.
மாணவர்கள் தங்கள் நண்பர்களை விரட்டிப்பிடித்து விளையாடினார்கள். மாணவிகள் தங்கள் தோழிகளை கட்டிப்பிடித்தும் பிரியாவிடை அளித்தனர். சில பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் தங்கள் கையில் வைத்திருந்த பேனாக்களில் இருந்து பேனா மையை நண்பர்கள், தோழிகளின் ஆடைகளில் மீது தெளித்து என்னை மறந்து விடாதே என்று உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
ஈரோடு காசிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் பள்ளியைவிட்டு உற்சாகமாக வெளியேறினார்கள். இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் ரங்கம்பாளையம் ரெயில்வே நுழைவுபாலம் பகுதிக்கு சென்று உற்சாக கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். ஒரு சைக்கிளில் கேக் வைத்து வெட்டி உற்சாக கோஷம் எழுப்பினார்கள். மேலும், வண்ணத்தாள்கள், நுரை ஆகியவற்றை தெளித்தும், கேக்கை முகத்தில் பூசியும் கொண்டாடினார்கள்.
கொரோனா காரணமாக சுமார் 1½ ஆண்டுகள் பள்ளிக்கூடத்துக்கே செல்லாமல் இருந்தாலும், நேரடியாக பள்ளிக்கூடத்துக்கு சென்று பொதுத்தேர்வுகள் எழுதிவிட்டு, கிடைக்கும் கோடை விடுமுறை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வுகள் நன்றாக எழுதி இருப்பதாகவும், நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பிளஸ்-1 வகுப்பில் நண்பர்களுடன் இணைந்து படிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் இந்த கொண்டாட்டத்தை அந்த வழியாக சென்ற பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.