தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.58 சதவீதம் பேர் தேர்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 95.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி.
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலையில் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. அதே போன்று மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் நேற்று காலையில் அனைத்து மாணவர்களுக்கும், செல்போன் மூலம் தங்கள் மதிப்பெண்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இதே போன்று அந்தந்த பள்ளிக்கூடங்களிலும் மதிப்பெண் பட்டியல் ஒட்டப்பட்டு இருந்தது. அங்கு மாணவ, மாணவிகள் சென்று பார்வையிட்டனர்.
5-வது இடம்
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 86 அரசு பள்ளிக்கூடங்கள் உள்பட 308 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 752 மாணவர்கள், 11 ஆயிரத்து 249 மாணவிகள் ஆக மொத்தம் 22 ஆயிரத்து 1 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 33 மாணவர்கள், 10 ஆயிரத்து 996 மாணவிகள் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 29 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.58 சதவீதம் ஆகும். மாணவர்கள் 93.31 சதவீதம் பேரும், மாணவிகள் 97.75 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சியில் 5-வது இடத்தை எட்டிப்பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 9-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 758 பேர் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 136 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இது 95.48 சதவீதம் தேர்ச்சி ஆகும். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 243 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 7 ஆயிரத்து 893 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.75 சதவீதம் ஆகும்.
26 அரசு பள்ளிகள்நூறு சதவீதம்
மாவட்டம் முழுவதும் உள்ள 308 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 114 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 86 அரசு பள்ளிக்கூடங்களில் 2 ஆயிரத்து 310 மாணவர்கள், 3 ஆயிரத்து 41 மாணவிகள் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 351 பேர் தேர்வு எழுதினர். இதில் 2 ஆயிரத்து 95 மாணவர்கள், 2 ஆயிரத்து 925 மாணவிகள் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 20 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இது 93.81 சதவீதம் ஆகும். இதில் மாணவர்கள் 90.69 சதவீதம் பேரும், மாணவிகள் 96.19 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். 26 அரசு பள்ளிக்கூடங்களில் படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று உள்ளனர்.