எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் 6-வது இடம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 6-வது இடத்தைப் பெற்றது. பிளஸ்-2 தேர்வில் 7-வது இடத்தை பிடித்தது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 6-வது இடத்தைப் பெற்றது. பிளஸ்-2 தேர்வில் 7-வது இடத்தை பிடித்தது.
பிளஸ்-2 தேர்வில் 7-வது இடம்
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 162 பள்ளிகளில் 7,219 மாணவர்களும் 8441 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 6,852 மாணவர்களும் 8,273 மாணவிகளும் சேர்ந்து 15 ஆயிரத்து 125 பேர் தேர்ச்சி பெற்றனர். இது மொத்தத்தில் 96.58 சதவீத தேர்ச்சி ஆகும். மேலும் மாவட்டத்திலுள்ள 162 மேல்நிலைப் பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
இதில் 15 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.மேலும் மைக்ரோ பயாலஜி பாடத்தில் 30 மாணவ,மாணவிகளும் நர்சிங் ஜெனரல் பாடத்தில் 21 மாணவ, மாணவிகளும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகங்கை மாவட்டம் இந்த ஆண்டு மாநில அளவில் 7-வது இடத்தை பெற்றுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.யில் 6-ம் இடம்
சிவகங்கை மாவட்டத்தில் 283 பள்ளிகளில் 8 ஆயிரத்து 939 மாணவர்களும் 8 ஆயிரத்து 725 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 17 ஆயிரத்து 664 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள். இவர்களில் 8,109 மாணவர்களும் 8,428 மாணவிகளும் சேர்த்து 16 ஆயிரத்து 537 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மொத்தத்தில் 93.62 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
மாவட்டத்தில் 283 பள்ளிகளில் 102 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. சிவகங்கை கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 109 பள்ளிகளில் 48 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 105 பள்ளிகளில் 42 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 69 பள்ளிகளில் 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. சிவகங்கை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 6-வது இடத்தை பெற்றுள்ளது.
இத்தகவலை முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் தெரிவித்தார்.