எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தோல்வி பயத்தில் மாணவர் தற்கொலை
பெண்ணாடம் அருகே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், முடிவு வெளியானதில் அவர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தார்
பெண்ணாடம்
தேர்வு முடிவுக்கு காத்திருந்தார்
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த செம்பேரி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு தனஞ்செழியன் (வயது 16), இனியவன் (13) என்று 2 மகன்கள் உள்ளனர். நடராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகன் தனஞ்செழியன் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இவர் பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
தூக்கில் தொங்கிய மாணவன்
இந்த நிலையில், நடராஜனின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வெளிநாடு சென்றார். அவரிடம், நடராஜனுக்கு தேவையான பொருட்களை தயார் செய்து கொடுத்து விடுவதற்காக சுகுணா சென்னை விமான நிலையத்துக்கு சென்றார்.
பின்னர், சென்னையில் இருந்து பெண்ணாடம் பஸ் நிலையத்துக்கு நேற்று காலை அவர் வந்தார். செல்போனில் தனது மாமியார் பழனியம்மாளுக்கு போன் செய்து, தான் பெண்ணாடம் பஸ்நிலையத்தில் உள்ளேன், என்னை அழைத்து செல்ல தனஞ்செழியனை மொபட் எடுத்து வர சொல்லுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, பழனியம்மாள் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது, அங்கு தனஞ்செழியன் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அவரது மருமகளுக்கு தெரியப்படுத்தினார். அவரும் அங்கு வந்து பார்த்து, கதறி அழுதார்.
தேர்வில் தேர்ச்சி
இதற்கிடையே நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தனஞ்செழியன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 226 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.
தேர்வு முடிவு எப்படி வருமோ என்கிற அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.