ஓட்டை, உடைசல் பெஞ்சுகளால் தேர்வு எழுத முடியாமல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் பாதிப்பு
கோலியனூர் அரசு பள்ளி தேர்வு மையத்தில் ஓட்டை, உடைசல் பெஞ்சுகளால் தேர்வு எழுத முடியாமல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கணிதம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. விழுப்புரம் அருகே கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
அப்போது சில அறைகளில் மாணவர்கள் தேர்வு எழுதும் பெஞ்சுகள் தகரமாகவும், ஓட்டை உடைசலாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணிதம் பாடத்திற்கான வரைபடங்களை சரிவர வரைய முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டதாகவும், குறித்த நேரத்திற்குள் வரைபடங்களை வரைய முடியாமலும் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே தேர்வு முடிந்து வீட்டிற்கு சென்றதும் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளனர். உடனே அவர்கள், பள்ளிக்கு நேரில் வந்து அங்கிருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.