புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
கமுதியில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மெயின்பஜாரில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் இந்த ஆலயத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.அதன் பிறகு தினமும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேர்திருவிழா நடைபெற்றது.இதில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் மைக்கேல் ஆண்டவர், செபஸ்தியார், சவேரியார் ஆகியோர் முன்னே செல்ல, பெரிய தேரில் அந்ேதாணியார் பவனி வந்தார். ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நகர்வலம் வந்த அந்தோணியாருக்கு, ஏராளமான இந்துக்கள் உப்பு, மிளகு, பொறி, மெழுகுவர்த்தி, மாலை ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். பலர் தங்களது குழந்தைகளை அந்தோணியார் சிலையின் காலடியில் போட்டு எடுத்தனர். தேர்பவனி அதிகாலை ஆலயத்தை வந்தடைந்தது.
கடைசி நாள் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியிறக்கம் நடைபெற்று, அசன விருந்து நடைபெறும்.இந்த விருந்தில் மத வேறுபாடு இல்லாமல் ஏராளமான இந்துக்கள் கலந்து கொள்வர். இந்த திருவிழாவை காண சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து உள்ளனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரத உறவின் முறையார் செய்திருந்தனர்.