புனித அந்தோணியார் ஆலய திருவிழா
தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.
வள்ளியூர் (தெற்கு):
தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித கொடியை ஆலய தர்மகர்த்தா மருத்துவர் ஞா.மி.ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் எடுத்து வந்தனர். அந்த கொடியை அருட்தந்தை ஜெபநாதன் அடிகளார் தலைமையில் அருட்தந்தை பீற்றர் பாஸ்டியான் ஜெபம் செய்து அர்ச்சித்தார். பின்னர் தர்மகர்த்தா கொடியேற்றினார். அதனைத்தொடர்ந்து ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. வள்ளியூர் பங்கு தந்தை ஜான்சன் அடிகளார் மறையுரை வழங்கினார்.
விழாவில் ஓ.எல்.எஸ்.மெட்ரிக் பள்ளி தாளாளர் அருட்தந்தை மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. 14-ந் தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 8.30 மணிக்கு உணவுத்திருவிழா நடைபெறும்.
15-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோலப்போட்டியும், பின்னர் திருப்பலியும், காலை 9 மணிக்கு புனித அந்தோணியார் இளைஞர் சார்பில் விளையாட்டுப் போட்டிகளும், இரவு பாடல், நடனம் மற்றும் மாறுவேடப்போட்டிகளும் நடைபெறுகிறது. 16-ந் தேதி மாலை சிறப்பு மாலை ஆராதனையும் அதனைத் தொடர்ந்து புனித அந்தோணியாரின் தேர்ப்பவனியும் நடக்கிறது.
17-ந் தேதி அதிகாலை சிறப்பு திருவிழா திருப்பலியும், காலை 9 மணிக்கு தனித்திறன் போட்டிகளும், பிற்பகல் 2 மணிக்கு புனித அந்தோணியார் தேர்ப்பவனியும், இரவு அரட்டை அரங்கம் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை சிபு ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.