புனித அந்தோணியார் ஆலய சப்பர பவனி
புனித அந்தோணியார் ஆலய சப்பர பவனி நடைபெற்றது.
விராலிமலை ஒன்றியம், லெட்சுமணன்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல 18-வது ஆண்டு திருவிழாவானது கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை முன்னிட்டு அன்று திருச்சி கிராப்பட்டி உதவி பங்குத்தந்தை சகாயராஜ் ஆலயத்தின் முன்பு கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ஆலயத்தில் புனித அந்தோணியாரின் இறை வேண்டுதல் திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கீரனூர் மறைவட்ட அதிபரும், பங்கு தந்தையுமான அருளானந்தம் தலைமையில் பங்கு தந்தையர்கள் கலந்து கொண்ட திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று இரவு 10 மணியளவில் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தோணியார் சொரூபம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. ஆலயத்திலிருந்து தொடங்கிய சப்பர பவனியானது லெட்சுமணன்பட்டியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கைகள், மேளதாளம் முழங்க சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை 7:30 மணியளவில் தேரடி திருப்பலி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை லெட்சுமணன்பட்டி புனித அந்தோணியார் ஆலய விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.