புனித அந்தோணியார் ஆலயதிருவிழா சப்பர பவனி
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா சப்பர பவனி நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா சப்பர பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
கொடியேற்றம்
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 13 நாட்களாக நடந்தது. திருவிழாவை முன்னிட்டு காலை, மாலையில் திருப்பலி நடதது.
முக்கிய நிகழ்வான ஆலய பெருவிழா திருப்பலி பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நேற்று காலையில் நடந்தது. திருவிழா திருப்பலிக்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி, விருதுநகர் மதுரை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சப்பர பவனி
முன்னதாக திருவிழாவை முன்னிட்டு காலையில் புனித அந்தோணியார் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி நடந்தது. அப்போது உப்பை தூவியும், கும்பிடு சரணம் போட்டும் இறைமக்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட பங்கு தந்தைகள் கலந்து கொண்டனர்.
நிறைவு நாளான இன்று(புதன்கிழமை) காலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முதன்மைக்குரு குழந்தைராஜ், தலைமையில் நன்றித்திருப்பலியுடன் கொடியிறக்கமும் நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு அரசு சார்பில் தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.