புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி
கீழையூர் அருகே புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் 51-வது ஆண்டு திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித செபஸ்தியாா் மின் அலங்கார தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. தேரை பங்குத்தந்தை வின்சென்ட் தேவராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். தேரின் முன்புறம் மிக்கேல் சம்மனசு, புனித பாத்திமா அன்னை, சூசையப்பர், ஆரோக்கியமாதா ஆகிய சிறிய தேர்கள் சென்றன. முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனி ஆலயத்தை வந்தடைந்தது. முன்னதாக, நாகை மறை மாவட்ட அதிபர் பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவுநாளான நேற்று காலை பங்குத்தந்தை தலைமையில் திருப்பலியும், அதனைதொடர்ந்து குழந்தைகளுக்கு ஞானஸ்தானம், புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை கொடி இறக்கம் நடைபெற்றது. திருவிழாவில், புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள், புனித செபஸ்தியார் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் அன்பியத்தை சேர்ந்தவர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.