தகராறை தட்டிக்கேட்டதில் கத்திக்குத்து
பேரணாம்பட்டு அருகே தகராறை தட்டிக் கேட்டத்தில் கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக நகராட்சி தி.மு.க. பெண்கவுன்சிலரின் கணவரை கைது செய்ய எதிர்ப்பு தெவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கத்திக்குத்து
பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிக்குத்தி மேடு பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் (வயது 35), கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி நாசீரா (29) மற்றும் 5 குழந்தைகளை தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த சாத்கர் கிராமத்தை சேர்ந்த யுவன்குமார் (21), வசந்தகுமார் (19), நீலகண்டன் (36), பேரணாம்பட்டு காமராஜர் நகரை சேர்ந்த சீனிவாசன் (23) மற்றும் வெங்கடேஷ் (30) ஆகிய 5 பேர் சிக்கந்தரை தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த சிக்கந்தர் தான் வைத்திருந்த கத்தியால் சீனிவாசனை குத்தினார்.
சமாதானம் செய்தார்
உடனே சீனிவாசனின் நண்பர்கள் யுவன்குமார், வசந்தகுமார், நீலகண்டன், வெங்கடேஷ் ஆகியோர் சிக்கந்தரை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்ததும் நகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் வெங்கடேசன், அப்துல் பாஷீத் ஆகியோர் தகராறை விலக்கி சமாதானம் செய்ய முயன்றனர்.
அப்போது சிக்கந்தர் சமாதானமடையாமல் மீண்டும் ரகளை செய்து தகராறில் ஈடுப்பட்டார். இதனால் அவரை சீனிவாசன் தரப்பினர் மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் நாசீரா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி அப்துல் பாஷித், யுவன் குமார், வசந்தகுமார், நீலகண்டன், சீனிவாசன், வெங்கடேஷ் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கைது செய்ய எதிர்ப்பு
இந்த நிலையில் நேற்று மதியம் தொழுகை முடித்து விட்டு ரோட்டில் நடந்து வந்த அப்துல் பாஷித்தை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது செய்ய முயன்றார். இதற்கு அப்துல் பாஷித் தரப்பை சேர்ந்த சுயேட்சை கவுன்சிலர்கள், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்து அப்துல் பாஷித்தை கைது செய்ய கூடாது, சம்மன் கொடுக்க வேண்டும் என கூறி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அப்துல் பாஷித்திடம் போலீசார் சம்மன் வழங்கினர். ஆனால் அப்துல்பாஷித் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகத்துக்குள் சென்றுவிட்டனர். இதனையடுத்து யுவன் குமார், வசந்தகுமார், நீலகண்டன், சீனிவாசன், வெங்கடேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.