கள்ளக்குறிச்சியில் விவசாயிக்கு கத்திக்குத்து
கள்ளக்குறிச்சியில் விவசாயை கத்தியால் குத்தியவா் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனா்.
கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 43). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (43) என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
நேற்று காலை ஜெய்சங்கர், அங்குள்ள ஏரியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வேல்முருகன் வழிமறித்து திட்டி, கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தோள்பட்டையில் குத்தியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த ஜெய்சங்கரின் மனைவி மீனா அங்கு ஓடி வந்து அவரை தூக்கினார். அப்போது மீனாவை வேல்முருகன் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதன்பின்னர், தனது கணவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து மீனா கொடுத்த புகாரின் பேரில் வேல்முருகன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.