சோளக்காடு சந்தையில் விற்பனைக்கு குவிந்த அன்னாசி பழங்கள்


சோளக்காடு சந்தையில் விற்பனைக்கு குவிந்த அன்னாசி பழங்கள்
x

சோளக்காடு சந்தையில் விற்பனைக்காக அன்னாசி பழங்கள் குவிந்தன. உழவர் உற்பத்தி குழு மூலம் விற்க மலைவாழ் மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நாமக்கல்

அன்னாசி பழங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக விளங்கும் கொல்லிமலையில் நுழைவுவாயில் கிராமமாக சோளக்காடு விளங்கி வருகிறது. தற்போது அன்னாசி பழம் சீசன் தொடங்கியதால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சோளக்காட்டில் உள்ள வார சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அன்னாசி பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதையொட்டி அங்குள்ள அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு போன்ற பகுதிகளில் இருந்து மலைவாழ் விவசாயிகள் தலைசுமையாகவோ அல்லது இருசக்கர வாகனங்களிலோ மூட்டை, மூட்டையாக அன்னாசி பழங்களை கொண்டு வந்து அந்த வார சந்தையில் குவிக்கின்றனர்.

அதன்பிறகு பல்வேறு மாவட்ட பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் ஒரு மூட்டை ரூ.700-ல் இருந்து ரூ.800 வரை விலை கொடுத்து தற்போது வாங்கி செல்கின்றனர். தொடக்கத்தில் இந்த விலை உயர்வு அடுத்த வாரங்களிலும் விற்காமல் திடீரென்று விலை குறைந்து விடுவதாகவும் மலைவாழ் விவசாயிகள் கவலையாக தெரிவிக்கின்றனர். இதனால் அன்னாசி பழத்திற்கு அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே சீரான விலை கிடைக்கும் வகையில் அங்குள்ள உழவர் உற்பத்தி மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

உழவர் உற்பத்தி குழு

மேலும் சில விவசாயிகள் கூறும்போது, உழவர் உற்பத்தி குழு செயல்படாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து அரியூர் நாடு ஊராட்சி மன்ற தலைவர் நாகலிங்கம் கூறுகையில், அரியூர் நாடு ஊராட்சியில் செயல்படும் உழவர் உற்பத்தி குழுவில் 780 மலைவாழ் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். உற்பத்தி குழு அலுவலகத்திற்கு ஒரு சில அலுவலர்கள் இல்லாதது தொடர்ந்து அந்த அலுவலகத்தின் அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகளால் இயங்காமல் இருந்து வருகிறது. அவற்றை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.


Next Story