தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


தஞ்சை மாவட்டத்தில்   ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x

தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நவம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் ஒட்டு மொத்த ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

விடுமுறை தினம், இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்அப், காணொளி ஆய்வுகளை கைவிடவேண்டும். ஊராட்சிச்செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியமும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஒய்வூதியம் வழங்கவேண்டும்.

நிரப்ப வேண்டும்

இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி, பணிவரன்முறை செய்ய வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தொழில்நுட்ப உதவியாளர்களை பணிநீக்கம் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நேற்று 800 பேர் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் போராட்டத்தால் அலுவலகங்கள் காலியாக கிடந்தன.

ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் ராஜன், மாவட்டத்துணைத்தலைவர்கள் இளையராஜா, முரளிதரன், மாவட்டப்பொருளாளர் தேசிங்குராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இன்று 2-வது நாள்

தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

திருவையாறு

திருவையாறு ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் முதல் கடைநிலை ஊழியர் வரை 55 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 47 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பணிகள் பாதிக்கப்பட்டன. அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story