பொது வினியோக திட்டத்தை ஒரே துறையின்கீழ் செயல்படுத்த வேண்டும்- கூட்டுறவு ஊழியர் சங்கம்
பொது வினியோக திட்டத்தை ஒரே துறையின்கீழ் செயல்படுத்த வேண்டும் என கூட்டுறவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
பொது வினியோக திட்டத்தை ஒரே துறையின்கீழ் செயல்படுத்த வேண்டும் என கூட்டுறவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்க கூட்டம்
திருவாரூரில் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன், கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் பொது வினியோக திட்டம் கூட்டுறவு துறை, உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை ஆகிய 2 துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிர்வாக குளறுபடிகள் ஏற்படுவதால் பொது வினியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் செயல்படுத்த வேண்டும்.
எடை குறைபாடு
பொது வினியோக திட்டத்திற்காக வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வகைப்படுத்த வேண்டும். பொருட்களின் எடை அளவு குறைகளை தவிர்க்கும் வகையில் பொது வினியோக திட்டத்திற்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் உறைகளில் அடைத்து வழங்க வேண்டும். பொதுவினியோக திட்ட ஊழியர்களுக்கு முழு ஊதிய நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குவதில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி
கூட்டுறவு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை பராமரிக்கும் முறையினை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில இணை செயலாளர் சித்ரா, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட பொருளாளர் வைத்தியநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வரவேற்புக்குழு தலைவர் விஜயன் வரவேற்றார். முடிவில் மாநில குழு உறுப்பினர் செல்வம் நன்றி கூறினார்.