நடக்க முடியாத மகனுக்கு சக்கர நாற்காலி கேட்டு பெண் கொடுத்த மனுவை திருத்திய ஊழியர்கள்; கலெக்டர் கண்டிப்பு


நடக்க முடியாத மகனுக்கு சக்கர நாற்காலி கேட்டு பெண் கொடுத்த மனுவை திருத்திய ஊழியர்கள்; கலெக்டர் கண்டிப்பு
x
தினத்தந்தி 18 July 2023 2:30 AM IST (Updated: 18 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

நடக்க முடியாத மகனுக்கு சக்கர நாற்காலி கேட்டு பெண் கொடுத்த மனுவை திருத்தம் செய்த ஊழியர்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கண்டித்தார்.

தேனி

நடக்க முடியாத மகனுக்கு சக்கர நாற்காலி கேட்டு பெண் கொடுத்த மனுவை திருத்தம் செய்த ஊழியர்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கண்டித்தார்.

மகனை தூக்கி வந்த பெண்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக குன்னூர் அருகே அன்னை இந்திரா நகரை சேர்ந்த மேரி என்பவர் தனது 17 வயது மகன் சுதீசை ஒரு ஆட்டோவில் அழைத்து வந்தார். ஆட்டோவில் இருந்து சுதீசை இடுப்பில் தூக்கிக்கொண்டு மனுக்கள் பதிவு செய்யும் இடத்துக்கு அவர் வந்தார்.

அப்போது மேரி தனது கையில் ஒரு மனு வைத்திருந்தார். அதில், தனது மகனுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அடையாள அட்டை இல்லை என்றும், தனது மகனை வைத்துக்கொண்டு செல்லும் வண்டி (சக்கர நாற்காலி) வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவரை பார்த்ததும் அங்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஊழியர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் அந்த மனுவை வாங்கி படித்து பார்த்தனர்.

மனு திருத்தம்

பின்னர், அந்த மனுவை அவர்கள் திருத்தம் செய்தனர். அதில், வண்டி, அடையாள அட்டை தொடர்பான வாசகங்களை அழித்து விட்டு மருத்துவ சிகிச்சை வேண்டி என்று திருத்தம் செய்ததாக கூறப்படுகிறது. மனுவை ஊழியர்கள் திருத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அந்த மனுவை கலெக்டர் ஷஜீவனாவிடம் கொடுத்தார்.

கலெக்டர் விசாரித்த போது, தனது மகனுக்கு சக்கர நாற்காலி வண்டி வழங்குமாறு கூறியதோடு, மனுவை ஊழியர்கள் திருத்தியது குறித்தும் தெரிவித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஊழியர் ஒருவரை அழைத்து கலெக்டர் கண்டித்தார். பின்னர் அந்த மனுவில் அவருக்கு நலத்திட்ட உதவி வழங்க பரிந்துரை செய்து கலெக்டர் எழுதிக்கொடுத்தார்.

பரபரப்பு

இதுகுறித்து மேரியிடம் கேட்டபோது, "எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நான் கட்டுமான கூலி வேலை செய்து பிழைத்து வருகிறேன். எனக்கு 2 மகன்கள். வறுமையால் 2-வது மகனை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைக்கிறேன். மூத்த மகனுக்கு தலையில் ஒரு கட்டி ஏற்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவனுக்கு கால்கள் செயல் இழந்து நடக்க முடியாமல் போனது. மகனை பராமரிக்க சக்கர நாற்காலி பொருத்திய வண்டி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதுகுறித்து கொண்டு வந்த மனுவை ஊழியர்கள் திருத்தினர். அதை அறிந்த கலெக்டர், எனக்கு வண்டி வழங்குவதாக தெரிவித்தார்' என்றார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த கோரிக்கை மனுவை, அந்த துறையை சேர்ந்த ஊழியர்களே குறைதீர்க்கும் கூட்டம் நடந்த கூட்டரங்கிற்கு வெளியே நின்று கொண்டு அதை, வேறு துறைக்கு பரிந்துரை செய்து எழுதிக்கொடுத்த இந்த சம்பவம் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story