வாருகால் சேதம் அடைந்ததால் தேங்கி நிற்கும் கழிவுநீர்


வாருகால் சேதம் அடைந்ததால் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x

சிவகாசி அருகே சேதமடைந்த வாருகாலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே சேதமடைந்த வாருகாலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

வாருகால்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்டது நாரணாபுரம் பஞ்சாயத்து ஆகும். இந்த பஞ்சாயத்தில் போஸ் காலனி, பர்மா காலனி, முத்துராமலிங்கநகர் ஆகிய பகுதிகள் உள்ளது.

இந்த பகுதியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கழிவுநீர் வாருகால் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து வாருகாலை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாரணாபுரம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. மழைக்காலங்களில் இந்த வாருகால் நிரம்பி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் செல்லும் நிலை உள்ளது. இதனை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்றால் கழிவுநீர் வாருகாலை தூர்வாரி இருபுறமும் சிமெண்டு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

திட்ட மதிப்பீடு

இதற்கு ரூ.60 லட்சம் வரை செலவாகும் என்று திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. நாரணாபுரம் பஞ்சாயத்தில் போதிய நிதி இல்லாத நிலையில் இந்த வாருகால் தூர்வாரப்படாமல் சேதமடைந்த நிலையில் தற்போது காணப்படுகிறது.

இதனால் இங்கு கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வாருகாலை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நாரணாபுரம் பஞ்சாயத்து தலைவர் தேவராஜனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- போஸ்காலனி வாருகால் சீரமைத்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்பது 20 வருட கோரிக்கை ஆகும். இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய பலன் கிடைக்காத நிலை தொடர்கிறது.

இதையடுத்து அசோகன் எம்.எல்.ஏ., மாணிக்கம்தாகூர் எம்.பி., யூனியன் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு சென்றேன். இவர்கள் தலா ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி தந்தால் இந்த பணி விரைவில் தொடங்கப்பட்டு தரமாக செய்து முடிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story